‘உ.பி., பீஹார் சகோதரர்கள் பஞ்சாபிற்கு வந்து ஆட்சி அமைக்க விட மாட்டோம்,” என, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பஞ்சாபில் வரும், 20ம் தேதி, 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பஞ்சாப் மாநிலம் ரோபர் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் வேட்பாளரான சரண்ஜித் சிங், காங்., பொதுச் செயலர், பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது சரண்ஜித் பேசும்போது,” பிரியங்கா பஞ்சாபின் மருமகள். உ.பி., பீஹார் சகோதரர்கள் பஞ்சாபில் நுழைந்து ஆட்சி அமைக்க விட மாட்டோம்,” என்றார். அதை ஆமோதித்து, பிரியங்கா பலமாக கை தட்டினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பிஉள்ளது.
இது குறித்து பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:உ.பி., பீஹார் மக்களை சரண்ஜித் சிங் இழிவுபடுத்தி விட்டார்.
அதை பிரியங்கா புன்னகையுடன் கைதட்டி ஆமோதித்துள்ளார். இதன் வாயிலாக பிரியங்காவும் உ.பி., மக்களை அவமரியாதை செய்துள்ளார்.மக்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள காங்., துாண்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ”சரண்ஜித் சிங்கின் பேச்சு அவமானமாக உள்ளது. பிரியங்காவும் உ.பி.,யை சேர்ந்தவர்தான் என்பதை அவர் மறந்து விட்டார். தனிப்பட்ட நபர் அல்லது சமூகம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்றார்,