Home இந்தியா இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஊதிய உயர்வு

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஊதிய உயர்வு

by Jey

இந்தியாவின் முக்கிய துறைகளில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 9.9 சதவீத ஊதிய உயர்வு இருக்கும்’ என, ‘ஏஆன்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சேவைகள் நிறுவனமான ஏஆன், இந்தியாவில், 40க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த, 1,500 நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, 26வது ஊதிய உயர்வு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:இந்தாண்டு, ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா அங்கம் வகிக்கும் நாடுகளில், இந்தியா 9.9 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கி முதலிடத்தில் இருக்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்தாண்டு ஊதிய உயர்வு உச்சத்தை எட்டும்.நாட்டின் பொருளாதாரம் வலுவாக மீட்சி கண்டிருப்பதும், வர்த்தகச் சூழல் சாதகமாக இருப்பதும், பல நிறுவனங்கள் புதுயுக சவால்களை சமாளிப்பதற்கான திறன்களை அதிகரித்திருப்பதும், ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும்.

குறிப்பாக, மின்னணு வர்த்தகம், துணிகர முதலீடு, உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஊதிய உயர்வு அதிகம் இருக்கும். இது குறித்து ‘ஏஆன் ஹியுமன் கேபிடல் சொல்யூஷன்ஸ்’ நிறுவன பங்குதாரர் ரூபங்க் சவுத்ரி கூறியதாவது:கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்ட சில்லரை வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, உடனடி உணவகங்கள் தற்போது வளர்ச்சி காணத் துவங்கிஉள்ளன.

இத்துறைகள் மின்னணு தொழில்நுட்பம் வாயிலான நவீன வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டி வருவது, 8 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊதிய உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. அதேசமயம் பண வீக்க உயர்வு, நிறுவனங்களுக்கு நிறுவனம் மாறும் ஊழியர்கள், தொடரும் கொரோனா அச்சுறுத்தல் போன்றவை நம் மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதையும் மறுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

related posts