இலங்கை தற்போது அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என்பது இரகசியமான விடயமல்ல.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்த மோதல்கள் இலங்கைக்கு குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச உறவுகள் சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த யுத்த மோதல்கள் காரணமாக இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி, அதேபோல் எரிசக்தி நெருக்கடிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹசித் கந்த உடஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் எரிசக்தி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்கள். இந்த இன்னும் சில நாட்களில் 120 டொலர்களாக அதிகரிக்கும். வரலாற்றில் அதிக்கூடிய விலை வரை கச்சாய் எண்ணெயின் விலை அதிகரிக்கலாம்.
இதனால், இலங்கை பெருந்தொகையான அந்நிய செலாவணியை செலவு செய்து எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய தேவையான அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத காரணத்தினால், எரிபொருளை கொள்வனவு செய்ய இந்தியாவிடம் ஏற்கனவே 400 மில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.
இதனை பயன்படுத்தி ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருந்தாலும் தற்போது உலக சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், எதிர்பார்த்த அளவு எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிலவும் நிலைமையில், தேசிய சந்தையில் தற்போதைய விலைகளை விட எரிபொருளின் விலைகளை பெருமளவில் அதிகரிக்க நேரிடும் என உடஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் முழு பொருளாதார கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடியில், மேலதிக டொலர்களை செலுத்த நேரிட்டால், அதனை இலங்கை மத்திய வங்கியால் சமாளிக்க முடியாமல் போலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.