வேலுார் மாநகராட்சி தேர்தலில், 60 வார்டுகளில், 44 இடங்களில், தி.மு.க., வெற்றி பெற்று மேயர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளது. பதவியை பிடிக்க வன்னியர், முதலியார் சமுதாயத்தினர் இடையே போட்டி எழுந்துள்ளது. மேயர் பதவி, பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வன்னியர் சமுதாயத்தில், காட்பாடி நகரச் செயலர் வன்னியராஜாவின் மனைவி புஷ்பலதா, 7வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கே மேயர் பதவி வழங்க, அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலுார் பூஞ்சோலை சீனிவாசன் மனைவி விமலா, 2வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.
சீனிவாசனால் தான், பிரச்னையின்றி கதிர் ஆனந்த் எம்.பி., ஆனார். இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில், விமலாவுக்கு மேயர் பதவி வழங்க, கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த, 31வது வார்டு கவுன்சிலர் சுஜாதாவுக்கு மேயர் பதவி வழங்க, வேலுார் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், அணைக்கட்டு எம்.எல்.ஏ., நந்தகுமாரின் ஆதரவாளர்கள் கோருகின்றனர்.
போட்டி கடுமையாக இருப்பதால், பிறருக்கு மேயர் பதவி கொடுக்கலாமா என தி.மு.க., மேலிடம் பரிசீலிக்கிறது.இதன்படி, 28வது வார்டு கவுன்சிலரான கல்லுாரி மாணவி மம்தாகுமார், 37வது வார்டு கவுன்சிலர் திருநங்கை கங்கா ஆகியோரில் யாருக்காவது மேயர் பதவி வழங்கினால், அது முன்மாதிரியாக இருக்கும் எனவும் தி.மு.க., மேலிடம் யோசித்து வருகிறது.