பேக்கரி உற்பத்தி பொருட்களுக்குத் தேவையான உள்ளீட்டு பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி நடவடிக்கை பாரிய பாதிப்படைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா, பட்டர், மாஜரின் மற்றும் பாம் எண்ணெய் போன்றவற்றின் தட்டுப்பாடு காரணமாகப் பொதுமக்களும், பேக்கரி உள்ளிட்ட அனைத்து தொழில் துறையினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகச் சங்கத்தின் தலைவரான என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்அவர் மேலும் தெரிவிக்கையில்,
”குறைந்தது இன்னும் ஒரு மாதத்துக்கு பேக்கரி தொழிலை முன்னெடுக்க முடியாது. சில மாதங்களாக கோதுமைமா தட்டுப்பாட்டால் தொழில்துறை பாதிக்கப்பட்டதுடன் தற்போது ஏனைய மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டர் , மாஜரின், பாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதுடன், நாட்டின் தேவையில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்பிறப் பாக்கிகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், மின்வெட்டு காரணமாக பேக்கரிகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.