பிரச்னைகளுக்கு தீர்வு காண விரைவில் பேச்சு நடத்த வரும்படி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, கவர்னர் ஜக்தீப் தன்கர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண, கவர்னர் மாளிகைக்கு பேச்சு நடத்த வரும்படி மம்தாவுக்கு அழைப்பு விடுத்து, கடந்த மாதம் கவர்னர் கடிதம் எழுதினார்.
இதற்கிடையே, மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்ட, கவர்னருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை அனுப்பியது.இதில், மதியம் ௨:௦௦ மணிக்கு கூட்டத்தை துவக்க வேண்டும் என குறிப்பிடுவதற்கு பதிலாக, தட்டச்சு பிழையால் அதிகாலை ௨:௦௦ மணிக்கு துவக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது; இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அமைச்சரவை கூடி சட்டசபை கூட்டத் தொடர் துவங்கும் நேரத்தை மாற்றி கவர்னருக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மதியம் ௨:௦௦ மணிக்கு கவர்னர் உரையுடன் துவங்குகிறது
இதற்கிடையில் பேச்சு நடத்த வரும்படி கவர்னர் விடுத்த அழைப்புக்கு பதில் அளித்து, முதல்வர் மம்தா எழுதிய கடிதத்தில், ‘பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்நாள் நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் மாளிகைக்கு வந்து உங்களை சந்திக்கிறேன்’ என கூறியிருந்தார்.இதையடுத்து மம்தாவுக்கு, கவர்னர் நேற்று எழுதிய கடிதத்தில், ‘பிரச்னைகளுக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்பட்டால் தான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். எனவே பேச்சு நடத்த கட்டாயம் வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.