சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை வந்த துணை ஜனாதிபதியின் விமானம் உட்பட, பல்வேறு விமானங்களை, பெண்கள் இடம் பெற்ற வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு குழுவினர் கையாண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்மண்டல அலுவலகம் சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை, தென் மண்டல செயல் இயக்குனர் ஆர்.மாதவன் துவக்கி வைத்து பேசுகையில், ”கொரோனா கால கட்டத்தில், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டில் பெண்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. அவர்களுக்கு பாராட்டுக்கள்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய பொது மேலாளர் முத்து, தகவல் தொடர்பு, வழித்தடம் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரிவு பொது மேலாளர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், பெண்களால் வழிநடத்தப்பட்டது.அப்போது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். துணை ஜனாதிபதி பயணித்த விமானம் தரையிறங்குவதற்கான அனைத்து பணிகளும் பெண்களால் மேற்கொள்ளப்பட்டன.முக்கியப் பிரமுகர்கள் மட்டுமின்றி, அனைத்து பயணியர் விமானங்களும், 32 பெண்கள் அடங்கிய குழுவால் கையாளப்பட்டன.
இதுகுறித்து, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஹரிப்பிரியா நாயர் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தில், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகிறேன். இந்த பணியில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. மிகவும் சவாலான பணி.
விமானங்கள் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான அனுமதி, புறப்படுவதற்கான அனுமதி, விமானத்தை நிறுத்துவதற்கான இடம் போன்றவற்றை கண்காணித்து, கட்டுப்படுத்துவதே என் பணி. மிகவும், மன அழுத்தம் தரக்கூடியது. இருந்தாலும், மனநிறைவோடு மேற்கொள்கிறோம். பெண்களால் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் இயக்கப்பட்டது சிறப்பான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் தொடர்பு, வழித்தடம் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரிவு இணை பொது மேலாளர் வசுந்த்ரா கூறியதாவது:வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில், முதல் பெண் தொழில் நுட்ப அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். தற்போது, தகவல் தொடர்பு, வழித்தடம் மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணை பொது மேலாளராக உள்ளேன்.இந்த பணி மிகவும் சவாலானது.
நான் பணிக்கு சேர்ந்த பல ஆண்டுகளுக்கு பின்தான், ஏ.எம்.எஸ்.எஸ்., என்ற தானியங்கி தகவல் பரிமாற்றல் அமைப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்தன. கடந்த 30 ஆண்டு பணியில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளேன். மிகவும் மன அழுத்தம் தரக்கூடிய பணி. குடும்பம் மற்றும் பணி இரண்டையும் சமமாக பார்த்தாலும், பல நேரங்களில் பணிக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளேன். மன அழுத்தம் ஏற்படும்போது, 10 நிமிடங்களுக்கு அமைதியாக இருந்து, பின் பணியை தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
துவக்க விழாவில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணைச் செயலர் குணால் சத்யார்த்தி, உறுப்பினர் செயலர் கமல் கிஷோர், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.