Home இந்தியா சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின்

சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின்

by Jey

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர் இளவரசி இருவரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் விடுதலையாகினர்.

சிறையில் இருக்கும் போது, சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டி, 2017ல் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

கர்நாடக அரசு அமைத்த விசாரணை கமிஷன் அறிக்கையிலும், சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததும், அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில அரசு, ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஆனால் விசாரணை தாமதமானது. இது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை அடுத்து, ஊழல் ஒழிப்பு போலீஸ் தரப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 7ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

இதையடுத்து, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, போலீசார் சுரேஷ், கஜராஜ மகனுார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.

சசிகலா, இளவரசி ஆகியோர் மீதும், குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், 24வது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 11) நேரில் ஆஜராகும்படி சசிகலா, இளவரசி உள்ளிட்ட 7 பேருக்கு நீதிபதி சம்மன் அனுப்பியிருந்தார்.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் தலா ரூ.3 லட்சம் மற்றும் 2 தனிநபர் ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

related posts