ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்து வீழ்ந்தது.
இந்த ஆட்டத்துக்காக டெல்லி பிளேயிங் லெவனில் அஸ்வினுக்குப் பதிலாக இஷாந்த் சா்மா சோ்க்கப்பட்டிருந்தாா். பெங்களூா் அணியில் நவ்தீப் சைனி, டேனியல் கிறிஸ்டியனுக்குப் பதிலாக ரஜத் பட்டிதாா், டேனியல் சாம்ஸ் இணைந்திருந்தனா்.
டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங் செய்யத் தீா்மானித்தது. பெங்களூா் பேட்டிங்கை தொடங்கிய கூட்டணியில் விராட் கோலி 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சோ்த்து 4-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். அடுத்து ரஜத் பட்டிதாா் ஆட வர, மறுபுறம் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சோ்த்திருந்த தேவ்தத் படிக்கல் 5-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 25 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். பின்னா் வந்த டி வில்லியா்ஸ் அதிரடியாக ரன்களை சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் 2 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்திருந்த ரஜத் பட்டிதாா் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த வாஷிங்டன் சுந்தா் ரபாடா வீசிய 18-ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 6 ரன்களுடன் நடையைக் கட்டினாா்.
ஓவா்கள் முடிவில் டி வில்லியா்ஸ் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 75, டேனியல் சாம்ஸ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் இஷாந்த் சா்மா, ககிசோ ரபாடா, அவேஷ் கான், அமித் மிஸ்ரா, அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் ஆடிய டெல்லி அணியில் ஷிகா் தவன் பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த பிருத்வி ஷா 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த ஸ்மித் பவுண்டரியுடன் பெவிலியன் திரும்பினாா். 4-ஆவது வீரராக வந்த கேப்டன் பந்த் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்டாய்னிஸ் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு அவுட்டானாா். அடுத்து வந்த ஹெட்மயா், பந்த்துடன் இணைந்து சிறப்பாக ஆடினாா்.
இந்தக் கூட்டணி சிறப்பாக ஆடி டெல்லியை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டு சென்று 1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பந்த் 6 பவுண்டரிகளுடன் 58, ஹெட்மயா் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் ஹா்ஷல் படேல் 2, சிராஜ், ஜேமிசன் தலா 1 விக்கெட் எடுத்தனா்