ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, மார்ச் 1ல், புதுச்சேரி தனியார் நிறுவனம் சார்பில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கமணிகள் பதித்த பெரிய ருத்ராட்ச மாலை, அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் வழங்கப்பட்டன. கோவில் நிர்வாகம் இந்த நகைகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. நகைகளை இதுவரை பதிவு செய்து, மதிப்பீடு செய்யாமல் பணியாளர்களே வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், நன்கொடையாக வழங்கிய 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மறைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது.
நகை மதிப்பீட்டிற்கு சிவகங்கையில் இருந்து அறநிலையத்துறை மதிப்பீட்டாளர் வர வேண்டும் எனவும், வைர நகைகள் மதிப்பு குறித்த பில் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வழங்கப்பட்ட நகையை மறைக்க முயற்சி நடக்கிறதா என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து, ராமநாதபுரம், வழுதுார் பா.ஜ., வழக்கறிஞர் கணேஷ், கலெக்டர் சங்கர்லால் குமாவத்திடம் மனு அளித்தார்.
கோவில் மேலாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ”நகைகள் தொடர்பாக முறைகேடு நடக்க வில்லை. நகைகள் 36 லட்சம் ரூபாய் என நன்கொடையாளர்கள் ரசீது தந்துள்ளனர். ”விடுமுறை நாட்கள் வந்ததால் நகைகளை கணக்கில் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. வைர நெக்லஸ் பில் இல்லாததால் அதை கேட்டுள்ளோம்,” என்றார்.