Home உலகம் இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை

இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை

by Jey

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா இதுவரை ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் ரஷியா மீது மென்மையான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்து வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களான ஸ்டீவ் ஷபொர்ட், ஜோ வில்சன், ரோ ஹானா ஆகியோர் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்துவை தூதரக அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷிய அதிபர் புதினுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். மேலும், உக்ரைனில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக இந்தியா பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன் – ரஷியா இடையே அமைதி திரும்ப முயற்சிக்க வேண்டும் என்றும் அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

உக்ரைன் மீது ரஷியா இன்று 23-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

related posts