ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, கலை, பொது சேவை, அறிவியல் – தொழில்நுட்பம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயலாற்றியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களில், 64 பேருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகள் வழங்கி கவுரவித்தார்
அதன்படி, இந்த ஆண்டு, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக, 64 பேருக்கு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், இருவருக்கு பத்ம விபூஷண், எட்டு பேருக்கு பத்ம பூஷண், 54 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.மற்றவர்களுக்கு, வரும், 28ம் திகதி நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பத்திரிகையாளர் ராதே ஷியாம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
ஜெனரல் ராவத் சார்பில் அவருடைய மகள்கள் விருதைப் பெற்றனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மறைந்த பஞ்சாபி நாட்டுப்புற கலைஞர் குர்மீத் பாவா, தொழிலதிபர்கள் என்.சந்திரசேகர், சைரஸ் பூனவாலா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
ஒடிசாவை சேர்ந்த, 125 வயது யோகா குரு சுவாமி சிவானந்தா, தமிழகத்தைச் சேர்ந்த, கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன், சதிர் நடனக் கலைஞர் முத்து கண்ணம்மாள், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.