பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பதிலுரை வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியவாதவது:-
2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 350 கோடி சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு அறிக்கை மே மாதத்திற்குள் குழுவால் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திக்கடவு திட்டம் 93 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,902.71 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து திட்டங்களிலும் பெரும் பங்கு ஏழைகளுக்காகவே ஒதுக்கப்படுகிறது. இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ரூ. 50 கோடி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ. 4,848 கோடி, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்களுக்கு ரூ. 4,816 கோடி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ. 2,800 கோடி, நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ. 100 கோடி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 480 கோடி உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய நிபுணர் குழு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இந்த குழுவில் உள்ளவர்கள் அரசிடமிருந்து ஒரு ரூபாய் வாங்கவில்லை. போக்குவரத்து போன்ற இதர விஷயங்களுக்கும் பணம் வாங்கியது கிடையாது.
கருணநிதி ஆட்சி முடியும்போது தமிழகத்தின் மொத்த கடன் தொகை உற்பத்தியில் 17.33 சதவீதம். ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு 15.55 சதவிகிதம் வரை குறைந்தது. ஆனால், கொரோனாவுக்கு முன்னதாகவே 22 சதவவீதம் வரை உயர்த்தியுள்ளனர். கொரோனாவுக்கு பிறகு 25.84 சதவீமாக உள்ளது. இது படிப்படியாக குறைக்கப்படும்.
நாம் ஏழை மாநிலம் இல்லை, வளர்ந்த மாநிலம். நமது இளைஞர்களுக்கு இலவச பேருந்து சலுகை கொடுத்தால் போதாது, அவர்களுக்கு வேலை தேவை. உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும்.
ஏழை மாநிலத்தில் இளைஞர்கள் 52 சதவீதம் பேர் கல்லூரியில் சேர மாட்டார்கள். 90 சதவீதம் குடும்பத்தினர் செல்போன் வைத்துள்ளார்கள். 75 சதவீத குடும்பத்தினர் சொந்த வீடுகளில் உள்ளார்கள். 75 சதவீதத்தில் 14 சதவீதம் பேர் தான் அரசால் கட்டப்பட்ட வீடுகளில் உள்ளார்கள். 66 சதவீதம் பேரிடம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இது வளர்ந்த மாநிலம்.
வணிக வரியை சிறப்பாக செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும். இதற்காக இரண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்ய கோரிக்கை விடுக்கப்படும் என கூறினார்.