“என்ன நடந்தாலும் சரி, நான் பதவி விலகப்போவதில்லை. நான் சண்டையின்றி சரணடைய மாட்டேன். மோசடி மனிதர்களின் அழுத்தம் காரணமாக நான் ஏன் வெளியேற வேண்டும்?” என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலக தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், அவரது கூட்டணிக் கட்சியினர் சிலர் எதிர்க்கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவருடைய ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மைக்கு இம்ரான் கான் அரசுக்கு குறைந்தபட்சம் 172 உறுப்பினர்கள் தேவை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 163 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இதற்கிடையே, தன் கட்சியை விட்டு விலகியவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரி, அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அவர்களை மீண்டும் தனது கட்சிக்கு திரும்பும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விசாரணையை தொடங்குவதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை(வெள்ளிக்கிழமை) கூடுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கை காரணமாக, பாகிஸ்தானின் அரசியலமைப்பு, நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆழ்த்தப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் பலம் வாய்ந்த அமைப்பான அந்நாட்டு ராணுவத்துடன் இம்ரான் கானின் உறவு முறிந்துள்ளது.அரசியலில் நாங்கள் தலையிடவில்லை என்று ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளோ, பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை இம்ரான் கான் தவறாக நிர்வகிப்பதாக குற்றம் சாட்டுகிறது.
இதை அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் தனது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக, பொதுமக்கள் ஆதரவைத் திரட்டி வருகிறார்.
மேலும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று, லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, மாபெரும் பேரணியை நடத்துவதன் மூலம், தனது பிரதமர் பதவிக்கு ஆதரவைக் காட்டுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் எந்த பிரதமரும் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அவருடைய பதவி தப்புமா என்பது மார்ச் 25 ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் கூட்டத்தொடரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பிற்கு பின்னரே தெரிய வரும்.