செய்தி இணையதளங்களை நடத்தி வரும் நிறுவனங்கள், ‘கூகுள்’ நிறுவனத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, பொருளாதார ரீதியாக ஏமாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு இந்திய போட்டி ஆணையத்தின் இயக்குனர் ஜெனரலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, டில்லி யில் உள்ள ஐ.என்.எஸ்., எனப்படும் இந்திய செய்தித்தாள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் உள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து செய்தியாளர்களை நியமித்து செய்தி சேகரிக்கின்றன. இந்த செய்திகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணையதளங்களிலும் வெளியாகின்றன.
இணையதள பயனாளர்கள், ‘கூகுள்’ தேடு தளத்தை பயன்படுத்தி செய்திகளை தேடி படிக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் முழுமையான பொருளாதார பலன்களை பகிர்ந்து கொள்வதில்லை. செய்திகளை வழங்கும் நிறுவனங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கூகுளின் விளம்பர வருவாய் குறித்தும் விபரங்கள் மறைக்கப்படுகின்றன
.’கூகுள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு உரிய தொகையை அளிக்க வேண்டும்’ என, ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் சட்டமே இயற்றப்பட்டுஉள்ளது.
இது தொடர்பாக, இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதை பரிசீலித்த ஆணையம், இது தொடர்பாக தங்கள் இயக்குனர் ஜெனரலை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.