நம் வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, அண்டை நாடான மாலத்தீவுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வரவேற்றார்.அப்துல்லாவுடன் ஜெய்சங்கர் இரு தரப்பு பேச்சு நடத்தினார். இருவரும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்
.நேற்று காலை அட்டு தீவுக்கு சென்ற ஜெய்சங்கர், அங்குள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை ஜெய்சங்கர் சந்தித்தார்.அந்த சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை மாலத்தீவு அதிபரிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அதில், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.இதில் கடல் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் அதிநவீன ‘ரேடார்’ கருவிகளை ஜெய்சங்கர் ஒப்படைத்தார்.இதையடுத்து, மத்திய அரசின் உதவியுடன் அட்டு தீவில் கட்டப்பட்டுள்ள தேசிய காவல் துறை மற்றும் சட்ட அமலாக்கத் துறை கல்லுாரியை, மாலத்தீவு அதிபருடன் சேர்ந்து ஜெய்சங்கர் துவக்கி வைத்தார்.