துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை அந்த வளாகத்தில் பல்வேறு நாடுகளின் தேசிய தின கொண்டாட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவுக்கான தேசிய தின கொண்டாட்டம் நேற்று நடைபெற திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் அமீரக சகிப்புத்தன்மை, சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முன்னதாக கண்காட்சி வளாகம் முழுவதும் இந்திய கலாசாரம், பாரம்பரியத்தை பிரபலப்படுத்தும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தின் பாரம்பரிய கலையான கரகாட்டம் அனைத்து தரப்பினரையும் ஈர்த்தது.
இதேபோல் நாதஸ்வர, தவில் வாத்தியங்கள் முழங்க வளாகம் முழுவதும் தமிழக கலைக்குழுவினர் சுற்றி வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. அதன் இசை பலரையும் ஆட வைத்தது. அதனை தொடர்ந்து வட இந்திய பாரம்பரிய பாங்ரா இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் உள்ள அல் வாசல் பிளாசாவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்திய-அமீரக மந்திரிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கொடியேற்ற நிகழ்ச்சியில், துபாய் போலீசார் அமீரக தேசிய கொடியை ஏற்றினர். அப்போது அமீரக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய தேசிய கொடியை துபாய் போலீசார் ஏற்றி ‘சல்யூட்’ அடித்தனர். பிறகு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.
இதில் முதலாவதாக அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் பேசினார். அவர் கூறுகையில், ‘‘இந்திய அரங்கம் 130 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 3.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார வாய்ப்புகளை பெற்றுள்ளது’’ என்றார்.
தொடர்ந்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-
“நெருக்கடியான சூழ்நிலையின் மீதுள்ள துணிச்சல், இடைவிடாத முயற்சி என அமீரக தலைமைகளின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு எக்ஸ்போ 2020 கண்காட்சியின் வெற்றி பிரகாசமான உதாரணமாக உள்ளது. இந்தியா வழங்கும் வாய்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் அங்கு முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். பங்குதாரர்களாக நாம் ஒருவருக்கொருவர் எதிர்கால பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும்.”
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கண்காட்சி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.