அண்டை நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக விற்பனை ஆவது குறித்து பிரதமரிடம் கேட்க வேண்டாம் என்றும், அவர் பொய்கள் நிறைந்த பையில் இந்தியாவை வைத்திருப்பதாகவும் காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், தொடர்ந்து மத்திய அரசையும், பிரதமர் மோடி மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடியின் தினசரி வேலைகள் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அதேபோல், கடந்த 2021ல் மட்டும் சுமார் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்து உள்ளதாகவும், 50 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதை அரசு உணருமா என்றும் கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து அவர் தெரிவித்ததாவது: பெட்ரோல் விலை ஆப்கானிஸ்தானில் ரூ.66.99 ஆகவும், பாகிஸ்தானில் ரூ.62.38, பூட்டானில் ரூ.86.28, நேபாளத்தில் ரூ.97.05 ஆகவும் உள்ள நிலையில், இந்தியாவில் ரூ.101.81 ஆக உள்ளது. இது பற்றி அந்த புனிதரிடம் கேள்விகள் கேட்காதீர்கள். பொய்கள் நிறைந்த பையில் இந்தியாவை வைத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.