நேற்று அமீரக பிறை பார்க்கும் கமிட்டி ரமலான் மாதம் தொடங்குவது குறித்து அறிப்பை வெளியிட்டது. அதன்படி அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் மாத நோன்பு தொடங்குகிறது. இதனை தொடர்ந்து அமீரகம் உள்ளிட்ட பெரும்பாலான வளைகுடா நாடுகளும் இன்று முதல் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
இஸ்லாமிய புனித மாதமான ரமலான் அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் இஸ்லாமிய விவகாரங்களில் சவுதிஅரேபியாவின் முடிவுகளை பின்பற்றி வருகிறது. இதில் நேற்று சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதால் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆங்கில நாள்காட்டிக்கும், இஸ்லாமிய நாள்காட்டிக்கும் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ரமலான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாள்காட்டியில் 11 நாட்கள் குறைந்து தொடங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் திகதி ரமலான் மாதம் தொடங்கியது.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி இந்த மாதத்தில்தான் புனித திருக்குர்ஆன் இறைதூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் வழியாக முதன் முதலாக இறைவனால் அருளப்பட்டது. இந்த மாதத்தில் ஜகாத் எனப்படும் தானம் கொடுப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியரும் செய்யக்கூடிய கடமையாகும்.
புனித ரமலான் மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ள நோன்பு நோற்கின்றனர். இதில் அதிகாலை பஜர் நேர தொழுகைக்கு முன்பாக சஹர் உணவு உண்ணப்படுகிறது. அதனை தொடர்ந்து சஹர் உணவு நேரம் முடிவடைந்ததும் நோன்பு நோற்பவர்கள் தண்ணீர் கூட பருகுவதில்லை.
இந்த ஆண்டு அமீரகத்தில் அதிகபட்சமாக சுமார் 14 மணி நேரத்திற்கு மேல் நோன்பு கடைபிடிக்கப்பட உள்ளது. அதாவது சராசரியாக காலை 4.45 மணியில் இருந்து மாலை 6.40 மணி வரை (தொழுகை நேரத்தை பொறுத்து சஹர், இப்தார் நேரம் மாறுபடலாம்) உணவோ அல்லது தண்ணீரோ பருகக்கூடாது.
அமீரகத்தில் நேற்று பிறைபார்க்கும் கமிட்டி அறிவித்தபடி இன்று முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குகிறது. இதன்காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த புனித மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள் தொடர்ந்து நோன்பு வைக்கப்படுகிறது. இதில் நேற்று முதல் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை தினமும் இரவு நேர இஷா தொழுகைக்கு பின் அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறுகிறது. இன்று தொடங்கியுள்ள நோன்பு ரமலான் மாதம் நிறைவுற்று ஷவ்வால் மாதம் முதல் நாள் ரம்ஜான் பண்டிகை வரும் வரை தொடரப்படுகிறது. இதில் வருகிற மே 2 அல்லது 3-ந் திகதி(பிறை தெரியும் அடிப்படையில்) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனால் அமீரக மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குறைக்கப்பட்ட வேலை நேரத்தை அறிவித்துள்ளது. இதில் அரசு அலுவலகங்கள் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 5½ மணி நேரம் செயல்படும். வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணி வரை அலுவலகங்கள் செயல்படும். அதேபோல் தனியார்துறைகள் தங்கள் வேலை நேரத்தில் இருந்து 2 மணி நேரம் குறைத்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமீரகத்தில் வங்கிகளும் காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செயல்படும்.
மேலும் போக்குவரத்து, கார்நிறுத்தங்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவைகள் தங்களின் தேவைக்கு ஏற்ப வேலை நேரத்தை மாற்றிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டில் நேற்று மாலை பிறை பார்க்கப்பட்டது. அப்போது பிறை தென்படவில்லை. எனவே ஓமன் நாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரமலான் மாதம் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டது.