உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகின.
இந்த பேச்சு வார்த்தை முடிந்து 3 நாட்களான நிலையில் நேற்று இரு தரப்பு அமைதி பேச்சு வார்த்தை காணொலி காட்சி வழியாக தொடங்கியது.
இதை உக்ரைன் அதிபர் அலுவலகம் உறுதி செய்தது.
ரஷிய தூதுக்குழுவின் தலைவர் மெடின்ஸ்கி கூறும்போது, “கிரீமியா, டான்பாஸ் தொடர்பான எங்கள் நிலைப்பாடுகளில் மாற்றம் இல்லை ”என்று கூறினார்.
பேச்சுவார்த்தை தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
உக்ரைன் வான் தாக்குதலால் ரஷியாவில் எண்ணெய் கிடங்குகள் நாசம்
ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலால் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.
புதிய திருப்பம்
ரஷியா- உக்ரைன் போரில் புதிய திருப்பமாக ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் உக்ரைன் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாயின.
ரஷிய நாட்டில் பெல்கொரோடில் உள்ள 8 எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. உக்ரைன் நடத்திய வான்தாக்குதல்தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்தத்தீ மேலும் 8 எண்ணெய் கிடங்குகளுக்கு பரவும் ஆபத்து உள்ளதாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி பி.பி.சி. கூறி உள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர்கள்
இந்த எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள்தான் தாக்குதல் நடத்தின என்று பெல்கொரோடு மாகாண கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் குற்றம்சாட்டி உள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருந்ததா, இல்லையா என்பதைப்பற்றி அதன் வெளியுறவுத்துறை அமைச்சகம் எதுவும் கூறவில்லை.
இது இரு தரப்பு அமைதிப்பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும் என தெரிகிறது.
இதுபற்றி ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, ‘இந்த தாக்குதல்கள் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க வில்லை” என்று குறிப்பிட்டார்.
மரியுபோல் நகர சோகம்
உக்ரைன் மீதான ரஷிய போர் 37-வது நாளாக நீடிக்கும் நிலையில் மரியுபோல் நகர மக்களின் நிலைமைதான் பரிதாபகரமாக உள்ளது. உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள், வெப்பமூட்டும் சாதனம் என அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ளவொரு வழியின்றி அல்லாடுகின்றனர். அங்கு சிக்கியுள்ள 1.70 லட்சம் மக்களை வெளியேற்ற பாதுகாப்புத்தடம் உருவாக்க ரஷியா முன்வந்ததாக தகவல்கள் வெளியாகின.
அங்கு முகாமிட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர், மரியுபோல் நருக்கு உதவிப்பொருட்களை வழங்கவும், மக்களை வெளியேற்றவும் உத்திகள் வகுக்கப்படுகின்றன என குறிப்பிட்டனர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச்செயலாளர் இவான் வாட்சன் கூறுகையில், மரியுபோல் மக்கள் அனுபவித்த கொடுமைகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நிலைமை மோசம் அடைந்து வருகிறது. உதவிபொருட்களை அனுமதிப்பதும், மக்களை வெளியேற அனுமதிப்பதும் மனிதாபிமான கட்டாயம் ஆகும் என குறிப்பிட்டார்.
மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்ற சென்ற 45 பஸ்களை ரஷிய படைகள் தடுத்துள்ளன. அந்த நகரத்தில் இருந்து 631 பேர் மட்டுமே கார்களில் வெளியேற முடிந்துள்ளது.
மேலும் மரியுபோல் நகருக்கு 14 டன் உணவு மற்றும் மருந்துப்பொருட்களை ஏற்றிச்சென்ற 1 டஜன் பஸ்களையும் ரஷிய படைகள் தடுத்து கைப்பற்றியதாக தகவல்கள் கூறுகின்றன.
மீட்கும் உக்ரைன் படைகள்…
வடக்கு நகரமான செர்னிஹிவின் அருகேயுள்ள சுலோபோடா, லுகாஷிவ்கா கிராமங்களை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளன.
கீவ் நகரின் கிழக்கேயும், வடகிழக்கேயும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் படைகள் கூறுகின்றன.
கீவின் வட கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ரஷிய துருப்புகளை உக்ரைனிய படைகள் பின்னுக்கு தள்ளுவதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆலோசகர் கூறியதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
அணுசக்தி தளத்தில் இருந்து வெளியேற்றம்
இதற்கிடையே செர்னோபில் அணுசக்தி தளத்தின் கட்டுப்பாட்டை உக்ரைன் கட்டுப்பாட்டுக்கு விட்டு விட்டு ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.
இதுபற்றி எனர்கோட்டம் என்ற உக்ரைன் அரசு மின்நிறுவனம் கூறும்போது, “ஆலையைச்சுற்றியுள்ள மண்டலத்தில் காட்டில் அகழிகளைத் தோண்டியதில் கணிசமான அளவு கதிர்வீச்சு ஏற்பட்டதைத் தொடர்ந்து செர்னோபில் அணுசக்தித்தளத்தை விட்டு ரஷிய படைகள் வெளியேறின” என தெரிவித்தது.
இந்த செர்னோபில் அணுசக்தி தளத்தை போரின் தொடக்கத்திலேயே ரஷிய படைகள் தங்கள் வசப்படுத்தி இருந்தது நினைவுகூரத்தக்கது.
இப்போது செர்னோபில் அணுசக்தி தளத்தில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கி சென்றுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு அணியினருடன் சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜார்ஜியாவில் இருந்து துருப்புகள்…
உக்ரைனில் நாட்டின் கிழக்குப்பகுதியில் தீவிரமான தாக்குதல்களை நடத்தும் வகையில் ரஷிய படைகள் ஒருங்கிணைக்கப்படுவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.
ஜார்ஜியாவில் இருந்து 1,200 முதல் 2,000 துருப்புகளை உக்ரைனுக்கு ரஷியா நகர்த்துவதாக இங்கிலாந்து கூறுகிறது.
ரஷிய படைகள் பிடித்துள்ள ஒரே பெரிய நகரமான கெர்சனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாக உக்ரைன் படைகள் கூறுகின்றன.