காங்கிரஸ் எம்.பி., ராகுல், உடல்நலக் குறைவால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் ஷரத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரத் யாதவ் உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
அவர் எனக்கு அரசியல் குறித்து நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஷரத் யாதவ் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்புணர்வு பரப்பப்பட்டு நாடு பிளவுப்படுத்தப் படுகிறது. தேசத்தை ஒன்றிணைத்து, நமது வரலாற்றின் ஒரு அங்கமான சகோதரத்துவத்தின் பாதையில் நடக்க வேண்டும்.
கடந்த 2, 3 ஆண்டுகளில் ஊடகங்கள், பா.ஜ., தலைவர்கள், ஆர்எஸ்எஸ் ஆகியவை உண்மையை மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி., ராகுல், இலங்கையை போல இந்தியாவிலும் உண்மை வெளிவரும் எனவும், தேசம் பிளவுபட்டு இருப்பதால் வன்முறை நிகழும் 2, 3 ஆண்டுகள் பொறுத்திருந்து பாருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார நிலைமை மற்றும் வேலைவாய்ப்பு நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்த நாட்டின் வேலைவாய்ப்பு கட்டமைப்பு மற்றும் முதுகெலும்பு முறிந்துவிட்டது. சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், சிறு கடைக்காரர்கள், முறைசாரா துறை ஆகியவையே நமது முதுகெலும்பு.
பொருளாதார வல்லுநர்கள் மற்ற நாடுகளைப் பார்த்து தங்கள் திட்டங்களை உருவாக்குகிறார்கள். மற்ற நாடுகளைப் போல் நாமும் மாற வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், அப்படிச் செய்ய முடியாது. முதலில், நாம் யார் என்பதையும் இங்கே என்ன நடக்கிறது என்பதையும் உணர வேண்டும். அவர்கள் முதுகெலும்பை உடைத்துவிட்டனர். இதன் பாதிப்பு அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் தெரியவரும்.
கடந்த 2, 3 ஆண்டுகளில் ஊடகங்கள், பா.ஜ., தலைவர்கள், ஆர்எஸ்எஸ் ஆகியவை உண்மையை மறைத்துவிட்டன. மெல்ல மெல்ல உண்மை வெளிவரும். அதுதான் இலங்கையில் நடக்கிறது. அங்கே உண்மை வெளிவந்துவிட்டது. இந்தியாவிலும் உண்மை வெளிவரும். இரண்டு நாட்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இந்தியா பிளவுபட்டு, பல்வேறு குழுக்களாக உருவாகியுள்ளது. முன்பு ஒரு தேசமாக இருந்தது, இப்போது தேசத்திற்குள் வெவ்வேறு நாடுகளை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கிறார்கள். இது வன்முறைக்கே வழிவகுக்கும். நான் கூறுவதை இப்போது நம்ப வேண்டியதில்லை. 2, 3 ஆண்டுகள் பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
‛காங்கிரசை 24 மணிநேரமும் இயக்க வேண்டும் எனில் ராகுல் தான் சரியாக இருப்பார். அவரை கட்சித் தலைவராக்க வேண்டும். அப்போதுதான் பெரிய அளவில் ஏதாவது செய்ய முடியும்’ என ஷரத் யாதவ் கூறியது குறித்து கருத்து தெரிவித்த ராகுல், ‛பார்க்கலாம்’ என பதிலளித்தார்.