மயிலாப்பூர் காவல் தலைமை இயக்குனர் அலுவலகத்தில், உளவுத்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் அருளரசு ஜஸ்டின். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து மயிலாப்பூர் பகுதியில் ஜீப்பில் சென்றார்.அப்போது, கடை ஒன்றில் பொருட்கள் வாங்க ஜீப்பை நிறுத்தினார்.
அங்கு, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், அருளரசு ஜஸ்டினிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, திடீர் தாக்குதல் நடத்தினார்.இது தொடர்பாக, மயிலாப்பூர் போலீசில் அருளரசு ஜஸ்டின் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ் பேட்ரிக், 42, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர் மீது, சட்ட விரோதமாக தடுத்தல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.விசாரணையில், மத்திய கிழக்கு நாடான கத்தார் நாட்டில் எண்ணெய் கப்பலில் பணியாற்றிய பிரின்ஸ் பேட்ரிக், மூன்று ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊரான மதுரைக்கு வந்தார்.
அங்கு, மது போதையில் பலரிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, மதுரை தல்லா குளம், செல்லுார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கைதாகி ஜாமினில் வெளியில் வந்தார் என தெரியவந்தது.சென்னை வந்தவர், இங்கு, கூலிக்கு அடியாள் வேலை செய்யும் பவுன்சராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.