Home உலகம் பிரான்சின் அதிபராக மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா?

பிரான்சின் அதிபராக மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா?

by Jey

பிரான்சில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் இமானுவேல் மேக்ரான். இவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.

இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மேக்ரான் மீண்டும் வெற்றிப்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று தேர்தல் நேற்று நடந்தது. வாக்களிக்க தகுதி பெற்ற 4 கோடியே 90 லட்சம் பேருக்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதாக கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

எனினும் மேக்ரானுக்கும், தீவிர வலது சாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையில்தான் இருமுனை போட்டி நிலவுகிறது.

முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்றால், வருகிற 24-ந்தேதி முதல் சுற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற 2 வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றிப்பெறுபவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

அந்த வகையில் முதல் சுற்று தேர்தலில் மேக்ரான் முதல் இடத்தையும், மரைன் லு பென் இரண்டாவது இடத்தையும் பிடிப்பார்கள் எனவும், அவர்களுக்கு இடையில் இரண்டாவது சுற்று தேர்தல் நடக்கும் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் இரண்டாவது சுற்று தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பில் உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே பிரான்சின் அதிபராக மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

related posts