Home உலகம் இவரின் நியமனம், உக்ரைனில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்

இவரின் நியமனம், உக்ரைனில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்

by Jey

”உக்ரைனின் மரியுபோல் நகரில், ரஷ்ய படைகளின் தாக்குதலில், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்,” என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு, உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விலகிய ரஷ்ய படையினர், கிழக்கு உக்ரைன் நகரங்களில், தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவை, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு தளபதியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நியமித்துள்ளார்.இந்த நியமனம், உக்ரைனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறுகையில், ”சிரியாவின் கசாப்பு கடைக்காரரான ஜெனரல் அலெக்சாண்டரை, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு தளபதியாக ரஷ்யா நியமித்துள்ளது.

இவரின் நியமனம், உக்ரைனில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்,” என்றார்.இதற்கிடையே தென் கொரிய பார்லிமென்ட் எம்.பி.,க்கள் மத்தியில், நேற்று உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:உக்ரைன் தலைநகரை விட்டு ரஷ்ய படையினர் விலகி இருந்தாலும், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், அவர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

துறைமுக நகரமான மரியுபோலில், ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அப்படி இருந்தும், ரஷ்யா தாக்குதலை நிறுத்தாமல் தொடர்கிறது. மரியுபோல் நகரம் தீப்பற்றி எரிகிறது. அங்கு நிலவும் சூழல் கவலை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

related posts