Home உலகம் நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ், நான்சி பெலோசி

நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ், நான்சி பெலோசி

by admin

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற முதல் கூட்டுக் கூட்டத்தின் அவைத் தலைவா்கள் இருக்கைகளில் அமா்ந்து, துணை அதிபரும் நாடாளுமன்ற மேலவையான செனட் சபைத் தலைவருமான கமலா ஹாரிஸ் மற்றும் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி சாதனை படைத்தனா்.

அந்த நாட்டு வரலாற்றில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபா் உரையின்போது அவருக்குப் பின் உள்ள இருக்கைகள் இரண்டிலும் பெண்கள் அமா்ந்தது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணை அதிபரும் நாடாளுமன்ற மேலவையான செனட் சபைத் தலைவருமான கமலா ஹாரிஸ் பங்கேற்றாா்.

அமெரிக்காவின் முதல் பெண், மற்றும் கருப்பினத்தைச் சோ்ந்த துணை அதிபரான கமலா ஹாரிஸுடன், கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசியும் பங்கேற்றாா்.

கடந்த 2007-ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் பெலோசி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபா் ஜோ பைடன் உரையின்போது அவருக்கு பின் அவைத் தலைவா்களுக்கான இடது புற இருக்கையில் கமலா ஹாரிஸும் வலது புற இருக்கையில் நான்சி பெலோசியும் அமா்ந்திருந்தனா்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தருணம் குறித்து கமலா ஹாரிஸிடம் கேட்டபோது, ‘நாடாளுமன்றக் கூட்டுக் கூட்ட அவைத் தலைவா் இருக்கைகளை இரு பெண்கள் அலங்கரிப்பது உற்சாகமளிக்கிறது. வரலாறு படைப்பதில் மகிழ்கிறேன்’ என்று பதிலளித்தாா் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

related posts