சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் இன்று காலை 6.30 மணியளவில் எழுந்தருளினார்.
சைவமும், வைணவமும் இணையும் வகையில், மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 5 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம
கள்ளழகர் தங்கக்குதிரையில் அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கி நேற்று முன்தினம் (ஏப்.,14) மாலை புறப்பட்டார். நேற்று மூன்றுமாவடியில் எதிர்சேவை முடிந்து, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று இரவு, பெருமாள் திருமஞ்சனமாகி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் இன்று கூடினர். தங்கக்குதிரை வாகனத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர், பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 6.30 மணியளவில் வைகையில் எழுந்தருளினார். ‘கோவிந்தா’ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர். முன்னதாக வெள்ளைப்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், அழகரை வரவேற்றார்.
இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார். நாளை (ஏப்., 17)காலை 11:00 மணிக்கு தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்.,18 இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார்.ஏப்.,20 மதியம் 12:05 மணி முதல் 1:30 மணிக்குள் கோயில் திரும்புகிறார்.