ஏப்ரல் 18, 2.20 PM
போரில் 23,300 உக்ரைன் படை வீரர்கள் கொன்று குவிப்பு
உக்ரைன் மீது ரஷியா கடந்த 50 நாட்களாக போர் தொடுத்து வரும் நிலையில்,அதற்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரையில் உக்ரைன் படை வீரர்கள் 23 ஆயிரத்து 300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷிய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி உக்ரைன் போரில், அந்த நாட்டின் 23 ஆயிரத்து 367 வீரர்கள் பலியாகி உள்ளனர். மரியுபோல் நகரில் கடந்த நாளில் மட்டும் 4 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் ரஷிய படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 18, 12.15 PM
உக்ரைனின் கிழக்கு நகரங்களில் ஏவுகணை தாக்குதல்
ஏப்ரல் 18, 8.30 AM
உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு; ரஷியா அறிவிப்பு
ஏப்ரல் 18, 7.00 AM
கருங்கடல் துறைமுகங்களில் நுழைய ரஷிய கப்பல்களுக்கு பல்கேரியா தடை
ஏப்ரல் 18, 5.00 AM
மரியுபோலில் நீடிக்கும் சண்டை
மரியுபோலில் ரஷிய படை மற்றும் உக்ரைன் படையினருக்கு இடையே கடுமையான சண்டை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஏப்ரல் 18, 4.00 AM
ரஷிய கடற்படை தளபதி மோஸ்க்வா குழுவினருடன் சந்திப்பு
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வீடியோவை வெளியிட்டுள்ளது, அதில் ரஷிய கடற்படை தளபதி நிகோலாய் யெவ்மெனோவ் மற்றும் மற்ற உயர் கட்டளை உறுப்பினர்கள் மூழ்கிய மாஸ்க்வா ஏவுகணை கப்பல் குழுவினருடன் சந்திப்பதைக் காட்டுகிறது.
மோஸ்க்வா வியாழன் அன்று உக்ரைன் படையால் பெரும் சேதமடைந்ததை அடுத்து மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 18, 3.00 AM
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனருடன் ஜெலென்ஸ்கி ஆலோசனை
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனருடன் ஜெலென்ஸ்கி ‘போருக்குப் பிந்தைய புனரமைப்பு’ பற்றி விவாதித்தார்.
உக்ரைனின் நிதி நிலைத்தன்மை மற்றும் போருக்குப் பிந்தைய புனரமைப்பு குறித்து ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏப்ரல் 18, 2.00 AM
போரில் 23,300 உக்ரைன் படை வீரர்கள் கொன்று குவிப்பு – ரஷியா அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதுவரையில் உக்ரைன் படை வீரர்கள் 23 ஆயிரத்து 300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கொனாஷென்கோ விடுத்துள்ள அறிக்கையில், “இன்றைய நிலவரப்படி உக்ரைன் போரில், அந்த நாட்டின் 23 ஆயிரத்து 367 துருப்புகள் பலியாகி உள்ளனர். மரியுபோல் நகரில் கடந்த நாளில் மட்டும் 4 ஆயிரம் துருப்புகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18, 1.00 AM
உக்ரைன் போரில் மேலும் ஒரு ரஷிய தளபதி பலி
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ரஷிய படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் போர்க்களத்திற்கு மிக அருகில் சென்று, ஆபத்தைத் தேடிக்கொள்வது வழக்கத்துக்கு மாறானதாக கருதப்படுகிறது. இந்த வரிசையில், உக்ரைன் போரில் ரஷியாவின் 8-வது படை பிரிவின் துணைத்தளபதி விளாடிமிர் பெட்ரோவிச் புரோலொவ் கொல்லப்பட்டு விட்டார். இதை ரஷியாவின் ‘டாஸ்’ செய்தி நிறுவனம் நேற்று உறுதிபடுத்தி உள்ளது.
அத்துடன் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கவர்னர் அலெக்சாண்டர் பெக்லோவும் இதை உறுதி செய்து இருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “டான்பாசில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் குண்டு வெடிப்பு சத்தங்களை இனி கேட்கக்கூடாது என்பதற்காக விளாடிமிர் பெட்ரோவிச் புரோலொவ் தனது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார்” என கூறி உள்ளார்
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷிய தளபதிகளில் 41-வது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் துணைத்தளபதி ஆண்ட்ரெய் சுகோவெட்ஸ்கி. மேஜர் ஜெனரல் விட்டாலி ஜெராசிமோவ், லெப்டினன்ட் ஜெனரல் யோகோவ் ரெசாண்ட்சேவ், கர்னல் செர்ஜி சுகாரெவ் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.
ஏப்ரல் 18, 12.00 AM
போப் ஆண்டவர் வேண்டுகோள்
வாடிகனில் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை வழிபாட்டின்போது, உக்ரைனில் நடந்து வரும் போர் முடிவுக்கு வர போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் அமைதி நிலவட்டும். இந்த கொடூரமான, புத்திசாலித்தனமற்ற போரின் வன்முறை மற்றும் அழிவினைத்தடுக்க மிகவும் முயற்சிக்கப்பட்டது. தயவு செய்து நாம் போருக்கு பழக வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
வீழ்ச்சியின் விளிம்பில் மரியுபோல் நகரம்: உக்ரைன் படை வீரர்களுக்கு ரஷியா கெடு
வீழ்ச்சியின் விளிம்பில் உள்ள மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் படை வீரர்களுக்கு சரண் அடைய ரஷியா கெடு விதித்தது. ஆனால் அவர்கள் அடிபணிய மறுப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில், தலைநகர் கீவை பிடிக்க வேண்டும் என்ற ரஷியாவின் முதல் கனவு, நிறைவேறவில்லை. ரஷியாவின் அடுத்த கனவு, மரியுபோல் நகரை கைப்பற்றுவதுதான். எனவே இந்தப் போரில் மரியுபோல் நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு ரஷிய படையினர் சுற்றி வளைத்து சரமாரி தாக்குதல்களை நடத்தியபடி இருக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், இந்த மரியுபோல் நகரம், ரஷியாவால் இணைக்கப்பட்டுள்ள கிரீமியாவுக்கும், கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் பாலமாக திகழ்கிறது. இதை கைப்பற்றிவிட்டால் அந்த ஒட்டுமொத்த பகுதியும் ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
மேலும், ரஷியாவுக்கு நிலம் சார்ந்த நன்மைகள் மட்டுமின்றி கடல்சார் நன்மைகளும் கிடைக்கும். அஜோவ் கடலையொட்டியுள்ள மரியுபோல் தவிர்த்து பிற நகரங்கள் அனைத்தும் ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மரியுபோலும் வந்து விட்டால், அஜாவ் கடலையொட்டிய அனைத்து பிராந்தியங்களும், கருங்கடலையொட்டிய பகுதிகளும் ரஷியாவின் கைக்கு வந்து விடும். இதனால் உக்ரைனின் கடல்வழி வர்த்தம் சீர்குலையும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மரியுபோல் கிடைத்துவிட்டால், அது ரஷிய படைவீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட காரணங்களால்தான் மரியுபோல் நகரம் மீது ரஷியா கூடுதல் கவனம் செலுத்துகிறது.
மரியுபோல் நகரத்தை ரஷிய தாக்குதல்கள், உருக்குலைய வைத்து விட்டன. அந்த நகரம்,வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. இந்த நிலையில் அங்கு உள்ள உக்ரைன் துருப்புகள் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்தால் மட்டுமே அங்கு தாக்குதலை நிறுத்துவோம் என்று ரஷிய அதிபர் புதின் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அங்கு நாட்டைக் காக்க உக்ரைன் படை வீரர்கள் உயிரைக்கொடுத்து போரிட்டு வருகிறார்கள்.
அந்த நகரில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள், டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பெசிமெனைனே கிராமத்துக்கு சென்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதியில் இருந்து அந்த நகரை விட்டு கிட்டத்தட்ட 19 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.
இந்த நகர மக்கள் அனைவரையும் வேண்டுமென்றே ரஷியா அழிக்க முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் மரியுபோல் நகரில் உக்ரைன் படையினர் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைவதற்கு ரஷியா நேற்று ஒரு நாள் கெடு விதித்தது. அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்தால் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவோம் என்று ரஷியா கூறி உள்ளது. எதிர்ப்புகளைத் தொடரும் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்று ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறி உள்ளார்.
ஆனால் அங்கு உக்ரைன் படையினர் அடிபணிந்து, சரண் அடைவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டி மரியுபோல் நகர மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்ஷெங்கோ கூறுகையில், “மரியுபோலில் உள்ள எஞ்சிய உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா கெடு விதித்தாலும், அவர்கள் தொடர்ந்து தங்களை காத்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். உக்ரைன் எம்.பி. ஒலெக்சி கோன்சரங்கோவும் இதை உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “நான் மரியுபோலில் உள்ள உக்ரைன் படை வீரர்களுடன் பேசினேன். அவர்கள் இறுதிவரை போராடப்போகிறார்கள் என்பது எனக்கு தெரியும்” என குறிப்பிட்டார்.
தற்போது மரியுபோல் நகரில் 2,500 உக்ரைன் படை வீரர்கள் ஒரு உருக்கு ஆலையில் இருந்து கொணடு ரஷிய துருப்புகளை எதிர்த்து வருகின்றனர். அங்கு வெளிநாட்டு கூலிப்படையினர் 400 பேர் இருப்பதாகவும் ரஷியா கூறுகிறது. இன்று மரியுபோல் மீது ரஷியா வரிந்து கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய படைகள் 700 உக்ரைன் படை வீரர்களையும், 1000 அப்பாவி மக்களையும் சிறைபிடித்துள்ளதாக உக்ரைன் துணைப் பிரதமர் இரினாவெரேஷ் சுக் கூறி உள்ளார். இதே எண்ணிக்கையிலான ரஷிய படையினரை உக்ரைனும் சிறைபிடித்து வைத்துள்ளது. துருப்புகளை மாற்றிக்கொள்ள விரும்புகிற உக்ரைன், அப்பாவி மக்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தலைநகர் கீவில் நேற்று காலையில் குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டதாக உள்ளூர் மேயர் இகோர் சாபோஜ்கோ தெரிவித்துள்ளார்.
கார்கிவ் நகரில் ரஷியப்படைகள் நேற்று ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதலில் உள்ளூர் மக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு உக்ரைன் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.