பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய மின்தடை நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச நிலைமையை பார்க்கும் போது, பாகிஸ்தானின் நிலைமை சமீபத்திய எதிர்காலத்தில் மாறாது என்றே தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயு(எல் என் ஜி) விநியோகித்து வரும் பல ஏற்றுமதியாளர்கள் கடந்த சில மாதங்களாக எரிவாயு ஏற்றுமதியை ரத்து செய்துள்ளனர்.
இதன்காரணமாக சந்தைகளில் புதிதாக எரிவாயு வாங்க அந்நாட்டு அரசு 6 டெண்டர்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அது முழுமையாக வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் செலவாகும்.
ஏற்கெனவே நிலவும் கடுமையான பொருளாதார சூழலில், மின்வெட்டு பிரச்சினை மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.
புதிய அரசின் கீழ் பிரதமராக பொறுப்பேற்றுகொண்ட ஷெரீப் இன்னும் மின்துறை மந்திரியாக யாரையும் நியமிக்கவில்லை.
பாகிஸ்தான் ஒப்பீட்டளவில் ஏழ்மையான நாடு. மேலும், இது எரிசக்தி இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளது. குறிப்பாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பால், நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிஃப்தா இஸ்மாயில் வெளியிட்ட டுவிட்டர் பதிவின்படி, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 3,500 மெகாவாட் மதிப்புள்ள மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் எரிபொருள் விநியோக பற்றாக்குறையை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள் வாங்க பாகிஸ்தான் போராடி வருகிறது.
பாகிஸ்தான் தனது மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளாக, நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயுவை வெளிநாடுகளில் இருந்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.