நேற்று தமிழக கவர்னர் மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவரது பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியும், கருப்பு கொடிகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, ‛இது தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி என விமர்சித்துள்ளார்.
கவர்னர் மீது தாக்குதல் நடைபெற்றது குறித்தும், கவர்னருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறியும் சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் அதிமுக எம்எல்ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்களை போலீஸ் அப்புறப்படுத்தாதது ஏன்? இது தமிழக காவல்துறை மேல் விழுந்த கரும்புள்ளி ஆகும்.
நான் முதல்வராக இருந்தபோது கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியபோதும் சட்டம் ஒழுங்கு முழுமையாக காக்கப்பட்டது.
ஆனால், தற்போது கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களின் நிலை குறித்து கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட நிலையில், இன்று அரசின் கைப்பாவையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.