நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் சுனாமி வேகத்தில் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்று பாதித்த நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவதற்காக 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கரோனா நோயாளிகளுக்கான 210 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொற்று பரவல் அதிகரித்து நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை 240 முதல் 351 ஆக அதிகரித்துள்ளது. ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்காக, 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய 044 400 67 108 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக்கொண்டு சேவையை பெறுவதற்கான நடவடிக்கையை சுகாதாரத் துறை எடுத்துள்ளது.
மேலும் சென்னைக்கு 60, திருவள்ளூர் 25, செங்கல்பட்டு 15, காஞ்சிபுரம் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் என தமிழகம் முழுவதும் 351 ஆம்புலன்ஸ் வாகனங்கள் என அதிகரித்துள்ளது.
ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5,200 நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இதில், சுமார் 2,500 தொற்று பாதித்த நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.