சிங்கப்பூரில், போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை, உயர் நீதிமன்ற தடை காரணமாக நிறுத்தப்பட்டது.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதை மருந்து கடத்தல் வழக்கில், தட்சிணாமூர்த்தி கட்டய்யா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று தண்டனையை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தட்சிணாமூர்த்தி கட்டய்யாவுடன் மரண தண்டனை கைதிகள், 12 பேர் இணைந்து சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:சிறை அதிகாரிகள் எங்களின் தனிப்பட்ட கடிதங்களை சட்ட விரோதமாக கைப்பற்றி, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பினர். சட்ட விரோதமாக கடிதங்களை அனுப்பியதற்கும், காப்புரிமை மீறலுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அட்டர்னி ஜெனரல் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்ற சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், தட்சிணாமூர்த்தியின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது; அத்துடன் மனுவை மே 21ல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.