Home இந்தியா சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்

சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்

by Jey

சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சியோமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:- சியோமி நிறுவனம், ஏற்கனவே, மிகப்பெரிய தொகையை சீனாவில் உள்ள தங்களது குழும நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டது. மீதத்தொகைதான் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான எச்எஸ்பிசி, சிட்டி பேங்க், ஐடிபிஐ மற்றும் டெய்ட்ச் வங்கிக் கணக்குகளில் இருந்தன.

குழும நிறுவனத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ராயல்டி தொகை செலுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட வணிகத் தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை சியோமி நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட செல்லிடப்பேசிகளை இந்த நிறுவனம் வாங்கவேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் செல்லிடப்பேசி தயாரிப்பாளர்கள், சீனாவை தலைமையகமாகக் கொண்டிருக்கும் சியோமியின் குழும நிறுவனங்களிலிருந்து செல்லிடப்பேசியைத் தயாரிக்கத் தேவையான பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து, சியோமி அளிக்கும் குறிப்புகளின்படி செல்லிடப்பேசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆனால், சியோமி இந்தியா நிறுவனம் இதுவரை எந்த தொழில்நுட்ப உத்திகளையோ, மென்பொருள் தொடர்புடைய உதவிகளையோ, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அளிக்கவில்லை. மாறாக, சியோமி இந்தியா நிறுவனம் பணத்தை வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது. ஆனால், பணம்பெறும் அந்த நிறுவனங்கள் எந்த வணிகச் சேவைகளையும் மேற்கொள்ளவில்லை. இது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் நான்காவது பிரிவின் கீழ் விதிமீறலாகும்.

அதுபோல, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும் போது, இந்த நிறுவனம் வங்கிகளுக்கு தவறான தகவல்களை அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

related posts