அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில், சுமார் 1,600 வீரர்களைக் கொண்ட அமெரிக்க ராணுவப் படை, ரூமேனியாவில் முகாமிட்டுள்ளது. இந்த படைத்தளம் உக்ரைன் எல்லை அருகே சுமார் 60 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இந்த படை அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ரூமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி ரூமேனியாவிற்கு சென்ற அவர், அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளை சந்தித்தார். அங்கு ராணுவ வீரர்கள் உணவருந்து இடத்திற்குச் சென்று அவர்களுடன் சேர்ந்து உணவு பரிமாறினார். வீரர்களுடன் கலந்துரையாடிய போது, தனது மகன் பியூ பைடன் ஈராக்கில் பணியாற்றியதை நினைவு கூர்ந்த அவர், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அவர்களை பிரிந்து இருப்பது மிகவும் கஷ்டமானது என்பதை தன்னால் உணர முடியும் என்று தெரிவித்தார்.