மா.சித்திவினாயகம்
புதுயுகத்தை பூவுலகில் புத்துயிராக்கும் ஜீவநாடி என்று நம்பியிருந்தவர்களின் எண்ணத்தைத் தின்றபடி ஏழைகளின் கண்ணீரை ஏப்பமிடத்துடித்து நிற்கிறது இந்தியச் சினிமா.சர்வதேச வர்த்தக வியாபாரிகளால் விரித்துக் கிடக்கிற இந்தஅபாயகரமான வலையமைப்பினுள் சிக்கித் தவிக்கிற அப்பாவி மாந்தருள் புலம்பெயர் தமிழரும் கணிசமாகஉள்ளனர்.
கலாச்சாரத்தின் காவலன் என்கின்ற கபடமான போர்வையினுள் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிற அபாயகரமான இந்தச் சினிமாவை தங்கள் சுக போக அரசியல்,பொருளியல் காரணங்களுக்காக ஆகர்ஷித்துக்கொண்டிருக்கிற பல தமிழினத் தலைமைப் பேர்வழிகளை நானறிவேன். தமிழிலே பெயரில்லாத, தமிழ்ப் பெயர்வைக்க விரும்பாத நடிக நடிகையரை, அவர்தம் படங்களை நீண்ட வரிசையில் நின்று பார்த்துத் தொலைக்கின்றவர்கள் தமிழ்பெயர் மன்றங்கள் வைத்து மற்றவர் குழந்தைகட்கு தமிழ் பெயர் சூட்டத்துடிக்கின்றார்கள்.,இதற்கும் ஒருபடி மேலே போய் தமிழக படங்களின் உப்புச்சப்பற்ற பாடல்களைவெளிநாடுகளில் வெளியிட்டு மகிழ்கின்றார்கள் இந்தப் புலம் பெயர் தமிழ் படைப்புப் பிரமங்கள். தமிழே தம்உயிர் மூச்சு என்று வாழுவதாகச் சொல்கிற புலம் பெயர் தமிழர்களின் பேச்சில் மட்டும் தமிழ் இருந்தால்சரியா? செயலிலும் அது வேண்டாமா? அபத்தமும் ஆபாசமும் நிறைந்த வெற்றுச் சந்தைதான் நாம் கட்டி வளர்த்திருக்கிற சினிமா. இதையே கலை என்று கொண்டாடி அங்குல அங்குலமாக ரசித்துக் கொண்டிருக்கின்றார்கள் புலம் பெயர் மக்கள்.
தமிழ்த் திரைப்படம் பேசத்தொடங்கி சுமார் எழுபத்தி ஐந்துஆண்டுகளுக்கு மேலாகின்றது. .அதன் ஆரம்பப் படமான தேவதாஸ் மற்றும் வண்ணப்படமாக வந்த புரட்டுப்படம் “அலிபாவும் நாற்பது திருடர்களும்” என ராஜாராணிக்கதைகளிலிருந்தும், கட்டுக்கதைகளிலிருந்தும், காதல்கதைகட்கு மாறியிருக்கிறது சினிமா.
அதன் நீண்ட வரலாற்றில் தமிழையும், தமிழின அறிவியலையும்,மானிடநேயத்தையும் தட்டி எழுப்பித் தலை நிமிர வைத்துள்ளதென சொன்னால் அதைவிட அபத்தம் வேறில்லை
திரையில் விழும் வண்ணங்கள் யாவும் அதில் நடிக்கின்ற நடிகரின் எண்ணங்கள் என்கின்ற எதிர்பார்ப்பில் அவர்களைக் காவடிமேல் தூக்கிஆடி தமிழக முதல்வராக்கி விட்டுதான் மறுவேலை எனப் பழகிப் போயினர் தமிழக மக்கள்
சினிமாக்கள் கருத்துக்களை விதைக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லைத்தான். ஆனாலும் அந்தக்கருத்துக்கள் நல்லவையா? கெட்டவையா? என்று பகுத்துப்பார்க்க வேண்டியவர்கள் திரைப்படம் எதைச்சொன்னாலும் கைஎடுத்துக் கும்பிடும் பக்தர்களாகி கையறு நிலையில் உள்ளமை அபாயகரமானது. அச்சம்தருவது. நடிக்கின்ற நடிகரைத் தெய்வமாக்கியும், காக்கும் ஆபத்தாண்டவர்களாக்கியும்,மகிழ்கின்றவர்களிடத்துசினிமா ஒரு பொழுது போக்குச் சாதனம் என்கின்ற கருதுகோள் கொஞ்சமும் எடுபடாது. அவ்வாறுதெய்வமாக்கப்பட்ட பலர் தமிழக அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் நம் கண்முன் விரிகின்றார்கள். சமூகச் சீரழிவுகளை வளர்த்து விடும் புராணக் கட்டுக்களையும்,இதிகாச இடர்களையும் மக்கள் மனதில்விதைத்து மக்களை மாக்களாக்கி விட்ட சினிமா இன்றைக்கும் அக்கொள்கையிலிருந்து கொஞ்சமும்விலகவில்லை.புலம்பெயர் தமிழரைச் சுற்றிப் படர்கின்ற இந்தச் சினிமா மோகம் வேறு தினுசில் அங்குமுகாமிட்டிருக்கிறது. நடிகர் நடிகையரை கொண்டாடங்களுக்கு, களியாட்டங்களுக்குவரவழைத்தல்,அவர்களைப் பிரதம விருந்தினர்களாக்கி விழாக்கள் சிறப்பு நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள்விருது வழங்கல்கள் புத்தக வெளியீடுகள் இசைக்கச்சேரிகள் நடன நிகழ்வுகள் என்று அவர்களின்மத்தியஸ்தத்தில் புலம் பெயர் தமிழர் கைதட்டுகின்றார்கள். வசந்த கால இரவுகள் நடிகர்கள் அல்லதுசினிமாத்துறை சார்ந்தவர்கள் இல்லாமல் புலம்பெயர் நிலத்தில் இல்லை என்கின்ற அளவிற்கு இறுகப்பின்னப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் என்கின்ற பெயரில் இயங்குகின்ற அமைப்புகள் கூட தமிழ்வல்லுனர்களை மொழிசார் புலைமையாளர்களை அழைப்பதற்குப் பதில் சினிமாக்காரரையே அழைத்துபார்வைப் பொருளாக்கி காட்சிப்படுத்திச் சந்தைப்படுத்துகின்றார்கள். வருமானம் வருமெனில் திரைத்தேவதைகளின் தீட்டுத் துணிகளையும் தங்கள் தலைப் பாகைகளாக கட்டிக்கொள்ளத் தயங்காதவர்களாயிருக்கின்றார்கள் இந்தச் தன்மானச் சிங்கங்கள்.
இத்தகு வியாபாரப் போட்டிகளில் ,பங்குப்பிரிவினைச் சண்டைகளில்,எழுத்துப் புரட்சிகளில் ஒருவர் சிண்டையொருவர் பிய்த்து பின் அது இன முலாமிட்டுதமிழர் பிரச்சனையாக தமிழர்தலைகளில் கட்டப்படுகின்றது. அரசியல் சொல்பவனும் சினிமாக்காரன், இசைவிழா நாடத்துபனும் சினிமாக்காரன்,நாட்டியம் நிகழ்துபவனும் சினிமாக்காரன் என்று அனைத்தும் சினிமாமயமாகியுள்ள புலம் பெயர் நிலத்துள் இவர்களினால் தமிழ் பெறும் பேறு என்ன ? என்று கேள்வி கேட்பவனும்இல்லை விடை பகர்பவனும் இல்லை. செருப்பை மாட்டுவது போல வழக்கமான நிகழ்வாக புலம் பெயர் நிகழ்ச்சிநிரல்களில் இது பொதுவாகி வருகின்றது., பத்திரிகைச்சமர், தொலைக்காட்சிச் சமர், வியாபாரச் சமர்,கோவில்சமர், ஊர்ச்சங்கச் சமர், துண்டுப்பிரசுர சமர் என்று அனைத்தையும் துப்பாக்கிச் சமராக்கி விட்டு ஒற்றுமைபேசவும், ஒன்று பட வைக்கவும் சமரசம் பேச நடிகர்களை இறக்குமதி செய்வதாய் கதை பின்னி போட்டாபோட்டியாக இயங்கும் தமிழினத் தலைமைகள் புலம்பெயர் தேசம் எங்கணும் மலிந்து வருகின்றார்கள்.இதில்மிகப்பெரிய சோகம் என்னவெனில் “”ஈழத்துப் பிரச்சனை எவ்வாறு முடியும்”” என்று அவர்களைப் போட்டுபபிடுங்கி எடுக்கிறது புலம் பெயர் ஊடகங்கள். இத்தகு தரகுமுதலாளித்துவ தமிழினத்தலைமைகள் குறித்தும், இவர்களினால் சமரசம் பேச அழைக்கப்படுகிற நடிக,நடிகைகள் குறித்தும் புலம்பெயர் சாமானியன்ஒவ்வொருவருள்ளும் உண்மையின் குரல் விழித்துக் கொண்டாலும் அதை ஒப்புக் கொள்ளவும், உரத்த குரலில்கேள்வி கேட்கவும் எவனும் தயாரில்லை.
பொய்மையாளர்களின் முகத்திரையை கிழித்தெறியவும்காலம்காலமாய் போடப்பட்டிருக்கிற கட்டுக்களை உடைத்தெறியவும் வேண்டிய தேவை புலம் பெயர்மனிதர்களுக்குண்டு .ஆனாலும் அவர்கள் மௌனத்துடன் வாழத்தலைப்பட்டுள்ளார்கள். இவர்களின் இத்தகு மௌனம் கொடுமையாளர்களின் சந்தர்ப்பவாதத்தினைவிடவும் கொடியது.