ஆந்திர கடலில் தங்க நிறம் பூசப்பட்ட மர்மமான தேர் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
வங்கக்கடலில் உருவான அதிதீவிர அசானி புயல், ஆந்திர கடலோரப் பகுதியில் இன்று (மே 11) கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், சுன்னப்பள்ளி கடற்கரை பகுதியில் தங்க நிறத்திலான தேர் ஒன்று கடலில் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு இழுத்தனர்.
தங்க நிறம் பூசப்பட்ட அந்த தேர் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்ததால், மக்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர். இருப்பினும் இந்த தேர் எங்கிருந்து வந்தது என்னும் தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை அதிகாரிகள் தேரை மீட்டு ஆய்வு செய்தனர். தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டிருப்பதால் வேறு நாட்டில் இருந்து மிதந்து வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் எஸ்.ஐ நவுபாதா, இது வேறு நாட்டிலிருந்து வந்திருக்கலாம். உளவுத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.