உத்தரகாண்டில் சார்தம் புனித யாத்திரை பிரசித்தி பெற்றது. இதற்காக கடந்த 3ந்திகதி அக்சய திருதியை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பக்தர்களுக்கான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வலைதளங்கள் திறக்கப்பட்டன.
தொடர்ந்து 6ந்திகதி கேதர்நாத் மற்றும் 8ந்திகதி பத்ரிநாத்தும் திறக்கப்பட்டன. இந்நிலையில், புனித யாத்திரை தொடங்கி 12 நாட்களில் யாத்திரைக்கு புறப்பட்ட பக்தர்களில் இதுவரை 31 பேர் உயிரிழந்து உள்ளனர் என உத்தரகாண்ட் பொது சுகாதார இயக்குனரான டாக்டர் சைலஜா பட் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
அவர்கள் அனைவரும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலையேறுவதில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட பிற உடல்நலம் சார்ந்த பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பயண வழிகளில் முக்கிய சந்திப்புகளில் பக்தர்களுக்கு சுகாதார பரிசோதனை நடைமுறைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதில், உடல்நலம் பாதித்த பக்தர்களை ஓய்வு எடுக்க அறிவுறுத்துகின்றனர். உடல்நலம் தேறிய பின்பு பயணம் செய்யும்படியும் கூறி வருகின்றனர்.