ஆளும் கட்சியை சேர்ந்த எலிசபெத் போர்னே, 61, பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக, பிரான்ஸ் வரலாற்றில், பிரதமர் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற சிறப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்சில், கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், அதிபர் இமானுவேல் மேக்ரான் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ், நேற்று முன்தினம் தன் ராஜினாமா கடிதத்தை இமானுவேல் மேக்ரானிடம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, பிரான்சின் புதிய பிரதமராக, தன் முந்தைய அரசில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் போர்னேவை, இமானுவேல் மேக்ரான் நியமித்து உள்ளார். அடுத்த சில நாட்களில், பிரதமரும் அதிபரும் கலந்து பேசி, புதிய அரசை அமைக்க உள்ளனர்.இது குறித்து, எலிசபெத் போர்னே கூறியதாவது:
எனக்கு கிடைத்த பெருமையை, இந்நாட்டின் இளம் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன். உங்கள் கனவை நனவாக்க அயராது பாடுபட்டால், சமூகத்தின் எந்த உயர் பதவியிலும் பெண்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.பிரான்சின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் எதிக் கிரசன் என்பது குறிப்பிடத்தக்கது.