அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் உள்ள ராப் தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் சல்வடார் ரொமஸ் என்ற 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளிக்குழந்தைகள், 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடாரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை கடினமாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று 5 வகுப்பு மாணவன் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணம் கேப் கரொல் நகரில் உள்ள பெட்ரிட் ஆரம்ப பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் டேனியல் மார்கஸ் (வயது 10). இந்த சிறுவன், தனது பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான். இதனை தொடர்ந்து மார்கசை கைது செய்த போலீசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், உவால்டே துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு இந்த மாணவனின் மனநிலையில் வெறுப்புணர்வு இருந்துள்ளார்’ என தெரிவித்துள்ளனர்.