தமிழகத்தில், ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, மொடக்குறிச்சி, வேடசந்தூர், ராமநாதபுரம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்ற சென்டிமெண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது.
இந்த 7 தொகுதிகளிலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக நேரடியாக களம் இறங்கியது. அதிமுக அணியில், மேட்டூர், மொடக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தபோது, ஆரணியில் அதிமுக, மேட்டூரில் பாமக, வீரபாண்டி மற்றும் சங்ககிரியில் அதிமுக, மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றிருந்தனர். ஆனால், திமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கும் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தொகுதிகள் என்ற சிறப்பினை ஆரணி உள்ளிட்ட 5 தொகுதிகளும் இழந்துள்ளன.
தொடரும் 2 தொகுதிகளின் சிறப்பு:
அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியும், ராமநாதபுரம் தொகுதியும் சென்டிமெண்ட் வரலாற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.காந்திராஜன், அதிமுக வேட்பாளர் பா.பரமசிவத்தை விட 17,553 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார்.
அதேபோல், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாஜக வேட்பாளர் குப்புராமைவிட 50,479 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 5 சென்டிமெண்ட் தொகுதிகளில் வெற்றிப் பெற்ற போதிலும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டன. அதே நேரத்தில் 2 சென்டிமெண்ட் தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றிப் பெற்றிருந்தாலும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.