மராட்டிய மாநிலம் புனே போலீசார் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சந்தோஷ் ஜாதவ், சிதேஷ் காம்ளே ஆகியோரை கைது செய்து உள்ளனர்.
இதேபோல நடிகர் சல்மான்கானுக்கு வந்த கொலை மிரட்டலுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி விக்ரம் பிரார் மூளையாக செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். மேலும் விக்ரம் பிராருடன் சிதேஷ் காம்ளே தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
கரண் ஜோகர் பெயர் இதையடுத்து போலீசார் சல்மான்கான் மிரட்டல் கடிதம் குறித்து சிதேஷ் காம்ளேவிடம் விசாரித்தனர். அப்போது அவர் மிரட்டி பணம் பறிக்கும் பட்டியலில் இந்தி சினிமா இயக்குனர் கரண் ஜோகரும் இருந்ததாக தெரிவித்து உள்ளார். கரண் ஜோகரிடம் இருந்து ரூ.5 கோடி பறிக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்தநிலையில் சிதேஷ் காம்ளே வாக்குமூலத்தின் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” சித்து மூசாவாலா கொலைக்கு பிறகு அதை வைத்து பாலிவுட் பிரபலங்களிடம் பணம் பறிக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டு உள்ளது.
விளம்பரத்திற்காகவும், அதன் மூலம் பெரிய தொகையை மிரட்டி பறிக்க கூட இதுபோன்ற வாக்குமூலங்கள் கொடுக்கப்படலாம். இந்த யுக்தி பஞ்சாப் மற்றும் அதையொட்டி மாநிலங்களில் சாதாரணம் தான். தாதாக்களுக்கு பெரிய கொலை வழக்குகளில் அவர்களின் பெயரும் வர வேண்டும் என விரும்புவார்கள் ” என்றார்.