தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பன்னெடுங்காலத்திற்கு ஈடுபட்டு வந்தனர். அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் களமிறங்கின.
இந்த நிலையில், அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் படைகள் முழுவதும் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி சென்றது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வாழ்வை தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர்.
தலீபான்கள் ஆட்சிக்கு வந்ததும், பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் விட்டு சென்ற ஆயுதங்களை, அந்நாட்டின் ஜபுல் மாகாணத்தில் உள்ள ஆயுத சந்தைகளில் தலீபான் தளபதிகள் விற்பனை செய்துள்ளனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் பெய்க் என்ற ஊடக தகவல் தெரிவிக்கிறது.
ஜபுலில் தலீபான் தளபதிகளால் விற்கப்பட்ட ஆயுதங்களில் பல ரகசிய முறையில் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாட்டின் தெற்கே அமைந்த கந்தகார் மாகாணத்தில், தலீபான் பாதுகாப்பு படையினர் அதிக அளவிலான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை கண்டெடுத்து உள்ளனர்.
அவற்றில் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், 13 கைத்துப்பாக்கிகள், வெடிக்க தயார் நிலையில் உள்ள பல சுற்றுகளை கொண்ட தோட்டாக்கள், கண்ணி வெடிகள் உள்ளிட்டவையும் தலீபான்களால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதனை ஆப்கானிஸ்தானின் மூத்த காவல் அதிகாரி முல்லா அப்துல் கனி ஹக்பின் என்பவர் உறுதி செய்துள்ளார்.
சட்டவிரோத ஆயுத பதுக்கலுக்காக 3 பேரை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் சட்டம் மற்றும் ஒழுங்கு உறுதி செய்யப்படுவதற்காக தனி நபரிடம் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதில் தலீபான் தலைமையிலான நிர்வாகம் எந்தவொரு முயற்சியையும் விட்டு விடாது என அவர் தெரிவித்து உள்ளார்.