டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த அயர்லாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தீபக் ஹூடா 104 ரன்னும் (57 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), சஞ்சு சாம்சன் 77 ரன்னும் விளாசினர்.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றியை நெருங்கி வந்து கோட்டை விட்டது. கடைசி ஓவரில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. இறுதி ஓவரை வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரை புதுமுக வீரரான உம்ரான் மாலிக்குக்கு கொடுத்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘உண்மையை சொல்லப்போனால் கடைசி ஓவரின் போது நான் கவலைப்படவில்லை. நெருக்கடிக்கு ஆளாகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
எதை பற்றியும் சிந்திக்காமல் அந்த தருணத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். உம்ரான் மாலிக் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதிவேகமாக வீசக்கூடிய அவரது பந்து வீச்சை அடித்து ஆடுவது கடினமானதாகும். அதனால் தான் அவரை கடைசி ஓவருக்கு அழைத்தேன்.
அயர்லாந்து அணியினருக்கு பாராட்டுகள். அவர்கள் அற்புதமான ஷாட்கள் ஆடினார்கள். இருப்பினும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வழிவகுத்தனர்’ என்றார்.