இது குறித்து மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டார் தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்தேன். கடந்த 2019 ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் தொண்டு நிறுவனத்தின் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா
கட்டார் சேரிட்டி என்ற தொண்டு நிறுவனத்தை இலங்கை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அத்துடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதம் சம்பந்தமான விடயங்களுக்கு அந்த நிறுவனம் நிதி வழங்குவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புப்படுத்த கட்டார் தொண்டு நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்திருப்பதாக அவரது சட்டத்தரணிகள் கூறியிருந்தனர்.
கட்டார் தொண்டு நிறுவனம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அலுவலகத்தை கொண்டு ஊழியர்களுடன் இயங்கி வந்தது.
அந்த நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த போதிலும் அலுவலகத்தில் பணியாற்றிய எவரையும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்யவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டார் தொண்டு நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட பின்னர், அவர் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியது.