மணிப்பூர் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. ராணுவ வீரர்கள் 12 பேர் உட்பட 38 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ராணுவ முகாம் அருகே ரயில்வே ‘யார்டு’ கட்டும் பணி நடக்கிறது. இங்கு, கடந்த 29ம் திகதி இரவு பெய்த கன மழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். சம்பவம் நடந்த அன்று 13 உடல்கள் மீட்கப்பட்டன. இதற்கு அடுத்த நாட்களில் ஏழு உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை மேலும் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு பணியில் இருந்த 12 ராணுவ வீரர்கள், 26 தொழிலாளர்கள் என, மேலும் 38 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பலியான வீரர்களுக்கு உரிய ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.