உஸ்பெகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட மத்திய ஆசிய நாடாகும்.உஸ்பெகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 35 மில்லியன். சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனி நாடாக உள்ளது.
தற்போதைய உஸ்பெக் அரசியலமைப்பின் கீழ், கசகஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள ‘கரகல்பக்ஸ்தான்’ பிராந்தியம், உஸ்பெகிஸ்தானுக்குள் இருக்கும் ‘தனி இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு’ என குறிப்பிடப்படுகிறது மற்றும் தனி நாடாகவும் பிரிந்து செல்ல உரிமை உள்ளது. இந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் அதிபர் அரசியலமைப்பின் புதிய திருத்தங்களை மேற்கொண்டார்.
அதன்படி, கரகல்பக்ஸ்தானுக்கென தனி இறையாண்மை மற்றும் பிரிவினைக்கான உரிமை ஆகியவை அனுமதிக்கப்படாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கரகல்பாக் மக்கள் சிறுபான்மையினராக வாழும் கரகல்பக்ஸ்தானில், நிர்வாகத் தலைநகரான நுகஸ் உள்பட பல இடங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்தன.
அதிபர் மிர்சியோயேவ் முன்மொழிந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களில், ‘சிவில் உரிமைகளை வலுப்படுத்துதல்’ மற்றும் ‘அதிபர் பதவிக்காலத்தை ஐந்தில் இருந்து ஏழு ஆண்டுகளாக நீட்டித்தல்’ ஆகியவையும் அடங்கும்.
போராட்டத்தை கட்டுப்படுத்த நடந்த போலீஸ் தடியடியின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரத்தில் இப்பகுதியில் இணைய சேவை தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, உஸ்பெகிஸ்தான் அதிபர் சனிக்கிழமை அன்று கரகல்பாக்ஸ்தானுக்கு வந்திருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, கரகல்பக்ஸ்தான் அந்தஸ்தை பலவீனப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்கள் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும்,உஸ்பெகிஸ்தானில் ஒரு மாத காலத்துக்கு, “அவசர நிலை” அறிவிக்கப்பட்டுள்ளது. கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள ‘அவசர நிலைமை’ இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுக்குப் பிறகு ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும். பொதுமக்கள் போராட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் மற்றும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது