சீன விண்வெளி ஆய்வு நிலையத்தின் இரண்டாவது ஆய்வுக் கூடத்தை, அந்நாட்டு விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவினர்.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. சீனா தனித்து, ‘டியாங்காங்’ என்ற சர்வதேச ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது. இதன் பிரதான ஆய்வுக் கூடம், ‘டியான்ஹி’ என்றும், கூடுதலான இரண்டு துணை ஆய்வுக்கூடங்கள், ‘வென்ஷியான்’ மற்றும் ‘மெங்ஷியான்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
இதில், ‘டியான்ஹி’ ஆய்வுக்கூடம் கடந்த ஆண்டு ஏப்ரலில் விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு மையத்தில் நிலைநிறுத்தப்பட்டது. ‘மெங்ஷியான்’ துணை ஆய்வுக்கூடம், அக்டோபரில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்நிலையில், ‘வென்ஷியான்’ துணை ஆய்வுக்கூடம் நேற்று விண்ணில் ஏவப்பட்டது.சீனாவின் ஹாய்னான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்தில் இருந்து ‘லாங் மார்ச் 5பி ஒய்3’ ராக்கெட் வாயிலாக இந்த ஆய்வுக்கூடம் விண்ணுக்கு ஏவப்பட்டது. இது வெற்றிகரமாக ஆய்வு மையத்தில் நிலை நிறுத்தப்பட்ட உடன், மையத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று விண்வெளி வீரர்கள், ஆய்வுக்கூடத்தை பரிசோதிப்பர் எனக்கூறப்படுகிறது.
சீனாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலைய பணிகள், இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.