தூத்துக்குடி அருகே முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர் வலைகளை உலர்த்தவும், சரி செய்யவும் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என சங்குகளி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். தர்ணா தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் முத்து மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சுமார் 30 பேர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கயத்தாறு தாலுகா கரடிகுளத்தில் 68 ஏக்கர் நிலத்தில் 14 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நிலத்தை ஒருவர் கோர்ட்டு உத்தரவு என்று கூறி, தனது பெயருக்கு பதிவு செய்து உள்ளார். விவசாயிகளின் பெயரில் உள்ள கிராம வருவாய் ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்வதற்கு முயற்சி நடந்து வருகிறது. ஆகையால் அந்த நிலத்தில் உரிமையாளர்களான 14 விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், அந்த நிலத்தை வேறு யாருக்கும் பட்டா மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும். அந்த விவசாயிகளின் உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.