சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்கள், 50 சதவீத இடத்திற்கு அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணங்களே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 70 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் 38 அரசு கல்லூரிகள், 19 சுய நிதி மற்றும் 13 நிகர்நிலை பல்கலைகழகங்கள் ஆகும்.
அவற்றில் 50 சதவீத இடங்களுக்கு, நிகர்நிலை பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கையானது, சுகாதார சேவை இயக்குநர் ஜெனரலால் தர வரிசை பட்டியல் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இவை, சுயநிதி மருத்துவ கல்லூரிகள் போல், கட்டண நிர்ணய குழுவின் கீழ் வராது.
சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், மாநில தேர்வு குழு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு, கல்லூரி நிர்வாகம் மற்றும் என்ஆர்ஐ கோட்டா அடிப்படையில் கட்டண விகிதங்களை, நிர்ணய குழு முடிவு செய்கிறது.
இந்நிலையில், சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில், 50 சதவீ த இடங்களுக்கு அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையாக மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் கல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வசூலித்து வரும் சூழ்நிலையில், கல்விக்கட்டணம் ரூ.4 ஆயிரம் உட்பட ஆண்டிற்கு ரூ.13, 610 மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் கல்வியாண்டில், எஞ்சிய இடங்களுக்கான கட்டணத்தை கல்வி கட்டண நிர்ணய குழு விரைவில் முடிவு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.