Home இந்தியா சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு

சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு

by Jey

நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவிடம், அமலாக்கத்துறையினர் 3வது நாளாக இன்றும்(ஜூலை 27)விசாரணை நடத்தினர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.

இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது.இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா மற்றும் ராகுலுக்கு, அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பியிருந்தது. இதன்படி, கடந்த மாதம் ஆஜரான ராகுலிடம், ஐந்து நாட்களில், 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டதால், விசாரணைக்கு ஆஜராக சோனியா அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. புதிய சம்மனை ஏற்று, கடந்த 21ல், அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 26ல் மீண்டும் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது.இதையேற்று, அமலாக்கத் துறை அலுவலகத்தில், சோனியா நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது. நேற்றைய விசாரணையின் போது, சோனியாவிடம், 28 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜாராகும் படி சோனியாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி 3வது நாளாக சோனியா மீண்டும் ஆஜரானார். அவருடன் பிரியங்கா உடன் சென்றுள்ளார்

இதனிடையே, அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், விசாரணைக்கு சோனியா முழு ஒத்துழைப்பு வழங்குகிறார். அதனால், விசாரணை இன்றுடன் நிறைவு பெறலாம் என தெரிவித்துள்ளன.

சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

related posts