அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் காட்டுத்தீ சிலந்திக்கு பயந்து, லைட்டரால் அதை கொல்ல முயன்ற நபரால் ஏற்பட்ட தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.உட்டா மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்வில் பகுதிக்கு அருகிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. குறித்த நபரால் அப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 5 மணிக்கு காட்டுத்தீ தொடர்பில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவப்பகுதிக்கு விரைந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறிப்போயுள்ளனர். இதனையடுத்து அருகாமையில் உள்ள தீயணைப்பு துறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கூட்டாக போராடியுள்ளனர்.
இதனிடையே, உட்டா கவுண்டி ஷெரிப் அலுவலகம் விசாரணையை முன்னெடுக்க, காட்டுத்தீக்கான காரணம் அம்பலமானது. அப்பகுதி நபர் ஒருவர் சிலந்திக்கு பயந்து, லைட்டரால் கொல்லப் பார்த்துள்ளார்.
இதுவே அப்பகுதியில் பெரும் காட்டுத்தீயாக வெடித்துள்ளது. குறித்த நபரை கைது செய்துள்ள நிலையில், அவரிடம் இருந்து போதை மருந்து பொட்டலங்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், போதைமருந்து பயன்பாடு மற்றும் காட்டுத்தீயை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.